காடவர்கோன் வன்னிய கோப்பெருஞ்சிங்கன்

காடவர்கோன் வன்னிய கோப்பெருஞ்சிங்கன்

தமிழகத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டளவில் நடு நாட்டில் (தற்போதைய கடலூர், விழுப்புரம் மாவட்டப் பகுதிகள்) ஒரு சிற்றரசு தோன்றி தலையெடுத்தது. இவர்களை காடுவெட்டிகள் என கல்வெட்டுகளும், காடவர் என இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.

தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த வன்னிய சோழப் பேரரசுக்கு இந்த சிற்றரசுகள் பெரும் சவாலாக விளங்கியிருக்கின்றன.

தொடக்கக் காலத்தில் கடலூரில் தங்கள் ஆட்சியை ஏற்படுத்தியவர்கள் பின்னர் விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் உள்ள சேர்ந்தமங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளனர்.

நாயன்மார்களில் ஒருவரான காடவர்கோன்

காடவர் குலத்தில் முதல் மன்னராக அறியப்படுபவர் ஐயடிகள் காடவர்கோன் என்பவராவார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார்.

திருத்தொண்டர் தொகை பாடிய சுந்திரமூர்த்தி நாயனார் இவரைப்பற்றி:

“ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்’ என்று பாடி பெருமைப்படுத்தியுள்ளார்.

இவர் பற்றி உமாபதி சிவாச்சாரியார் அவர்கள்:-
“வையம் நிகழ் பல்லவர்தம் குலத்துவந்த மாமணி மாநிலம் முழுவதும் மகிழ்ந்து காக்கும் ஐயடிகள் காடவர்கோன் அருளால்”.

இதன் மூலம் காடவரும், பல்லவரும் ஓரினம் என்பதும்; சிலை எழுத்து மூலம் பல்லவரும் வன்னியரும் ஒன்றே என்பதும் நிறுவப்பட்ட உண்மையாகும்.

காடவர் பட்டப்பெயர் கொண்ட வன்னிய மன்னர்களின் வழிவந்தவர்களில் மிகச்சிறந்த மன்னராக இருப்பவர் காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன் என்பவர் ஆவார்.

கோப்பெருஞ்சிங்கனின் தமிழ்ப்பற்று

காடவர் மன்னனான மணவாளப் பெருமாளுக்கும் சிலாவதிக்கும் பிறந்தவன் கோப்பெருஞ்சிங்கன். இவன் தமிழ்மொழி மீது அளவு கடந்த பற்று கொண்டவனாக விளங்கி இருக்கின்றான்.

“பேணு செந்தமிழ் வாழப் பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கன்” என்ற பட்டப் பெயரைக் கொண்டவன். இவனது ஆட்சிக் காலம் கி.பி.1212 முதல் கி.பி.1231 வரையிலாகும்.

இவன் காலத்தில் தமிழ்மொழி உன்னத நிலையில் விளங்கி இருக்கிறது என்பதற்கு, இவனது வெற்றிச் சிறப்புகள் பற்றி பொறிக்கப்பட்டிருக்கின்ற பாடல் கல்வெட்டுகளே சான்றாக உள்ளன.

பல கலைகளை வளர்த்த கோப்பெருஞ்சிங்கன்

தமிழ்மொழியைப் பேணி வளர்த்தது போன்றே ஆடற்கலையையும் வளர்த்திருக்கிறான். அதன் காரணமாக “பாரதம் வல்ல பெருமாள்”, “பரதம் வல்லான்” என்ற விருது பெயர்கள் மூலம் பாராட்டப்பட்டிருக்கின்றான்.

இதேபோல், இவ்வேந்தன் கட்டிடக் கலையிலும் சிற்பக் கலையிலும் பெருவிருப்பம் உடையவனாக இருந்திருக்கின்றான் என்பதை

* தில்லை ஆடவல்லான் கோயில் தெற்குக் கோபுரத்தைத் திருப்பணி செய்திருக்கிறான் என்பதன் மூலமும்
* சேந்தமங்கலத்தில் இவனது தந்தையால் கட்டப்பட்டிருக்கும் வானிலை கண்டீச்சுரர் கோயில் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியாருக்கு கொடை அளித்திருப்பதோடு அம்மன் சந்நிதி கோப்பெருஞ்சிங்கன் மூலம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலமும் அறிய முடிகிறது.

கோப்பெருஞ்சிங்கன் இறைப் பற்றுடையவன்; இரக்க குணம் கொண்டவன் என்பது பல்வேறு கல்வெட்டுக்களின் மூலம் அறியப்பட்டிருக்கிறது.

காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சிப்பகுதி

கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சிப்பகுதி பற்றிய விவரங்களை கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்; செங்கற்பட்டு மாவட்டம், ஆத்தூர்; திருக்கழுங்குன்றம்; விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர்; திருவண்ணாமலை மாவட்டம் வைலூர்; நாகை மாவட்டம் ஆக்கூர்; வேலூர் மாவட்டம் மோரிஜோனை ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளன.

மேற்கண்ட கல்வெட்டுகளில் இருந்து
வடக்கே வேலூர் மாவட்டம்
தெற்கே நாகைப்பட்டினம் மாவட்டம்
மேற்கே திருவண்ணாமலை மாவட்டம்
கிழக்கே கடலூர் மாவட்டம்

ஆகிய பகுதிகள் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சிப்பரப்புக்கு உட்பட்டதாகி இருந்ததை அறிய முடிகிறது. கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சிக் கொடி காளைக் கொடி. இவனது இலச்சினையும் காளையே ஆகும்.

பல்வேறு கல்வெட்டுகளின் மூலம்

 • அழகிய பல்லவன் கோப்பெருஞ்சிங்கன்
 • பெரிய தேவர் கோப்பெருஞ்சிங்கன்
 • சொக்க சீயன்; அழகிய சீயன் கோப்பெருஞ்சிங்கன்
 • ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கன் காடவராயன்
 • திருபுவனத்திராசாக்கள் தம்பிரான்
 • திருபுவனச் சக்கரவர்த்தி
 • மூவுலக ராசாக்களின் தலைவன்
 • சகலபுவனச் சக்கரவர்த்தி

என்கிற பல்வேறு பட்டப் பெயர்களை கோப்பெருஞ்சிங்கன் பெற்றிருந்தான் என்பதை அறிகிறோம்.

கோப்பெருஞ்சிங்கன் நடத்திய போர்கள்

கோப்பெருஞ்சிங்கன் நடத்திய போர்களுள் மிகவும் முக்கியமானது சேவூர் போர். இதற்கு முன்பு,

தெள்ளாற்றில் மூன்றாம் ராஜராஜனுக்கும் கோப்பெருஞ்சிங்கனுக்கும் போர் நடந்த செய்தி குறித்தும்; அந்தப் போரில் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் ராஜராஜனை தோற்கடித்து கோப்பெருஞ்சிங்கனின் தலைநகரில் சிறை வைத்திருந்த செய்தி குறித்தும் வைலூர் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.

இதனைக் கேள்விப்பட்ட போசள மன்னன், தன் படைகளை அனுப்பி கோப்பெருஞ் சிங்கனை போரில் தோற்கடித்து, மூன்றாம் ராஜராஜனை சிறைமீட்டு, சோழ நாட்டில் விட்டவிட்ட பிறகு;

மீண்டும் போசள மன்னன் படையோடு தற்போதைய பெரம்பலூர் மாவட்டத் தலைநகரான பெரம்பலூரில் போர் புரிகிறான். இந்தப் போரில், போசள மன்னனின் படைத் தளபதிகளான கேசவ; ஹரிஹர தண்டநாயக முதலானோரை கொன்று; அவரது பொருளையும், பெண்டிரையும் கைக் கொள்கிறான் கோப்பெருஞ்சிங்கன். அப்போரினால், தனக்கு ஏற்பட்ட பாபத்தை போக்கிக் கொள்ளும் முகத்தான், விருத்தாசலம் கோயிலுக்கு சில அணிகலன்களை கொடையாகவும் வழங்கி இருக்கிறான்.

இதன் தொடர்ச்சியாக மேலும் சில போசளர் படைத் தலைவர்களைக் கோப்பெருஞ் சிங்கன் சிறைபிடித்தான் என்ற செய்தி நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் மண்டபத்தின் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

இம்மன்னன் நடத்திய போர்களிலேயே சேவூர் போர் பெரிய அளவில் நிகழ்ந்த போராகத் தெரிகிறது. இப்போர் குறித்த ஒரு பாடலில்,

“சூரிய மண்டலத்தின் உயரத்தை விட அதிகமாகக் குவிக்கப்பட்ட பிணக்குன்றுகளில் இருந்து பரவியோடிய ரத்தமாகிய நீர் தொண்டை நாடு முழுவதும் சூழ்ந்து கொண்டது” என்கிறது.

கவிஞனுக்கே உரிய மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்று கொண்டாலும்; இப்போரின் முடிவில் தொண்டை நாட்டுப் பகுதி முழுவதும் கோப்பெருஞ் சிங்கன் ஆட்சிக்கு உட்பட்டுவிட்டதையே இதன் மூலம் அறிகிறோம். அதுவரை பல்லவப் பேரரசுக்குப்பின் ஆட்சிக்கு வந்த சோழர் ஆட்சியையும்; அவருக்குத் துணையாக வந்து தமிழகத்தினஅ சில பகுதிகளைத் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருந்த போசளரது ஆட்சியையும் முற்றிலும் கோப்பெருஞ்சிங்கன் இந்தப் போரின் மூலம் முடிவுக்கு கொண்டுவந்து விட்டான். இச்சேவூர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் இருக்கும் மேல் சேவூராக இருக்கலாம் என்பது வெங்கட்ட சுப்பையர் போன்ற ஆய்வாளரின் கருத்தாகும்.

இந்தப் போர்களுக்குப் பிறகு, கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிப் பகுதியில் அமைதி நிலவியது. பாண்டியர்களிடம் இருந்து வரி பெற்றுக் கொண்டு அமைதியாக ஆட்சி நடத்தியிருக்கிறான்.

இவ்வமைதி காலத்தில்தான், கோப்பெருஞ்சிங்கன் சோழமண்டலத்தில் தலயாத்திரை சென்றிருக்கிறான். இந்த தலயாத்திரையை இவனது ஆட்சிக்கால கல்வெட்டு ஒன்று “சோழ மண்டலம் பார்த்தருளி” என்று கூறியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் சோழ நாடு இவனது ஆட்சிப் பகுதியில் ஓர் அங்கமாக அடங்கிவிட்டது.

காவிரியின் தென்கரையின் கிழக்கு நோக்கிச் சென்று அங்கிருந்த கோயில்களை எல்லாம் வணங்கிவிட்டு; சிவன் கோயில்களுக்கு தேவதானங்களும், வைணவ கோயில்களுக்குத் திருவிடையாட்டங்களும் வரி நீக்கித் தந்து பழுதடைந்த திருத்தலங்களுக்கெல்லாம் திருப்பணி செய்து முடித்திருக்கிறான்.

ஜெயங்கொண்ட சோழவளநாட்டு ஆக்கூருக்கு சென்றபோது, அப்பகுதியில் வாழ்ந்த மக்களில் சிலர் நெடுங்காலமாக அரசுக்கு வரி செலுத்த வேண்டிய நெல் மற்றும் காசு செலுத்தாததினால் தங்கள் ஊரைவிட்டு பிழைப்புத் தேடி வெளியூர் சென்றிருந்ததை அறிந்து அவர்களைத் திரும்பவும் தங்கள் ஊருக்கு வரச் செய்து, அவர்களுக்கு அவர்களது நிலங்களையும் தந்து வாழச் செய்திருக்கிறான். இதனால் காருண்ய சீலன் என அம்மக்கள் கோப்பெருஞ் சிங்கனை வாழ்த்தி வந்துள்ளனர்.

தமிழ் பற்றாளனாகவும்; பெரும் வீரனாகவும்; கலை; கட்டிடக் கலை ஆர்வலராகவும்; இரக்கமுள்ள மன்னனாகவும் விளங்கிய கோப்பெருஞ் சிங்கன் ஆட்சிக் கால வரலாறு காடவ மன்னர்கள் வரலாற்றில் பொற்காலமாகும்.

கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் காடவராய மன்னர்கள்

 • கி.பி.6-ம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு முடிய தொண்டை மண்டலத்தில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இதன் பிறகு
 • கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவிலேயே காடவர்கள் பற்றிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவர்கள் பிற்கால காடவர்கள்
 • பிற்கால காடவர்களில் முதன் முதலில் குறிப்பிடப்படுபவன் சக்தி விடங்கன் என்னும் காடவராயர்.
 • மோகன் என்னும் இராஜேந்திர சோழக் காடவராயன்
 • சேனாதிபதி ஆதித்தன் சிற்றம்பலம் உடையான் எனும் கஞ்சனூர் காடவராயன்
 • காடன் மகாதேவி சோழன் சோறுடையான்-முதலாம் குலோத்துங் சோழன் அரசியாவாள்
 • அழகிய வளந்தனரான காடவரையர் (கி.பி.1076-1112)
 • ஆட்கொள்ளி காடவர்கோன் (கி.பி.1146)
 • அரச நாராயணன் கச்சிராயனான காடவராயர்
 • வீரசேகரக்காடவராயன் ஏழிசை மோகன் என்னும் ஜனநாதக் கச்சிராயன் (கி.பி1170-1200)
 • ஏழிசை மணவாளப் பெருமாள் (கி.பி.1200 -1211)
 • முதலாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1212- 1231)
 • இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243-1279)
 • இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்குப் பிறகு, காடவர் குலத்தில் யார் ஆட்சி புரிந்தார் என்பதற்கான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை.

  (காடவர் வன்னியர் வரலாறு என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் அவர்கள் எழுதிய நூலில் இருந்து சுருக்கி எழுதப்பட்டது இக்கட்டுரை.)

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )