வானவல்லி

வானவல்லி

தமிழில் இதுவரை எழுதப்படாத 2195 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த சோழப்பேரரசனான கரிகாலனின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு தான் இந்த புதினம். வானவல்லி சி.வெற்றிவேல் எழுதிய முதல் புதினம் ஆகும். வானவல்லி எழுதத் தொடங்கிய பிறகு தான் சங்க இலக்கியங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்க தொடங்கியதாக இந்த புதினத்தின் படைப்பாளியான சி.வெற்றிவேல் கூறுகிறார். தனக்கு கிடைத்த குறிப்புகள், அவர் அறிந்து கொண்ட உண்மைகள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்து உசாத்துணை நூல்களையும் குறிப்பிட்டுள்ளார். ஆதாரக் குறிப்புகள் அனைத்தையும் எங்கிருந்து எடுக்கப்பட்டவை, எந்தெந்த பக்கங்கள் என்பதனையும் ஆராய்ச்சியை விரும்புபவர்களுக்காக கொடுத்திருக்கிறார்.

வானவல்லி – ஒரு அறிமுகம்

தமிழக வரலாற்றில் பொற்காலம் என்றால் அது காதலையும், வீரத்தையும் போற்றி வாழ்ந்த சங்ககாலத்தின் ஆரம்ப காலம் தான். அச்சங்க கால மன்னர்களுள் மிகச் சிறந்தவன் கரிகாலன். சோழர்கள் தமது வல்லமையை இழந்து குறுநில மன்னர்களாகி புகழை இழந்து தஞ்சைக்கு அருகில் ஒடுங்கிய வேளையில் இக்கரிகாலனைத்தான் முன்னுதாரணமாகக் கொண்டு இழந்த புகழை மீட்டெடுத்து தெற்கே குமரி, வடக்கே கங்கை, கிழக்கே கடாரம் வரை வென்றனர். பிற்காலச் சோழர்கள் அன்றி முற்கால சேரர்களான இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன் மற்றும் செங்குட்டுவனுக்கும் முன்னுதாரணமாக விளங்கியவன் கரிகாற் பெருவளத்தான். தமிழக மன்னர்களுள் முதன் முதலில் இலங்கையை வெற்றி பெற்ற பிறகு இமயம் வரைப் படையெடுத்து வென்று தனது புலிச் சின்னத்தை இமயத்தில் பொறித்து போரில் தோற்ற பிற நாட்டு வீரர்களைக் கொண்டு காவிரிக்குக் குறுக்கே அணையைக் கட்டி, இரு புறங்களிலும் கரை எடுத்த மாபெரும் மன்னன் கரிகாற் பெருவளத்தான். தமிழக வரலாற்றில் யாராலும் நெருங்க இயலாத புகழின் உச்சியை அடைந்த கரிகாலன் அவனுக்குரிய அரியா சனத்தை அடைவதற்குள் அவன் அடைந்த இன்னல்களும், துயரங்களும் பல! தாய் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவன். பிறகு வளர்ந்ததும் எதிரிகளால் கைது செய்யப்பட்டு மாளிகைக்குள் அடைத்துவைக்கப்பட்டு மாளிகையோடு எரிக்க முயன்ற கொடுமையும் அவனது வாழ்வில் தான் அரங்கேறியது. அதிலிருந்து அவன் எப்படித் தப்பி எங்கெங்கு ஓடியிருப்பான் என அறியும் பொருட்டு காவிரியில் மரக்கலம் சென்றதாய் கூறும் சங்கப் பாடல்களை உள்ளத்திலே நிறுத்தி புனையப்பட்ட புதினமாக வவல்லி திகழ்கிறது.

வானவல்லி புதினத்தின் கதாபாத்திரங்கள்

இக்கதையில் வரும் வளவன், இளந்திரையன், இரும் பிடர்த்தலையர், இருங்கோவேள், சேரன் பெருஞ்சேரலாதன், பாண்டியன் தென்னவன், ஹிப்பாலாஸ், சதகர்ணி, புஷ்யமித்ர சுங்கன், அக்னிமித்ர சுங்கன், மகாமேகவாகன பேரரசன் காரவேலன் ஆகியவர்களே வரலாற்று பாத்திரங்கள். மற்றவர்களான வானவல்லி, விறல் வேல், வளவனார், திவ்யன், யவன வீரன் டாள் தொபியாஸ், அடிமை வீரன் இம்ஹோடெப் ஆகியவர்கள் அனைவரும் எழுத்தாளரால் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள் ஆகும். யவன வீரன் எதற்கு என்ற கேள்விக்கு விடையாக, உலகப் புகழ் பெற்றிருந்த பட்டினமான புகாருக்கு வாணிபம் செய்ய வந்த யவனர்கள் பலர் புகாரிலேயே தங்கிவிட்டனர் என்பதை பட்டினப்பாலை மூலம் அறியலாம் என்ற உண்மையை நமக்கு உணர்த்துவதற்காகவும், யவனர்களை விடுத்து சங்ககால சோழர்களின் வரலாற்றை எழுத இயலாது என்பதை உணர்த்துவதற்காகவும் இந்த பாத்திரத்தை எழுத்தாளர் படைத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This