சதாசிவ பண்டாரத்தார்

சதாசிவ பண்டாரத்தார்

சோழப்பேரரசின் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக சான்றுகளுடன் எழுதியவர் தான் சதாசிவ பண்டாரத்தார். ‘வரலாற்றுப் பேரறிஞர்’ என்று போற்றப்படும், தி.வை.சதாசிவ பண்டாரத்தார், கும்பகோணத்திற்கு வடக்கே உள்ள மண்ணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருப்புறம்பயம் எனும் ஊரில் ஆகஸ்ட் 15ம் நாள், 1892ம் ஆண்டு, வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

சதாசிவ பண்டாரத்தாரின் பள்ளிப்பருவம்

பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்து, தனது உயர் கல்வியை கும்பகோணத்தில் தொடர்ந்தார். 1910 ஆம் ஆண்டு சதாசிவ பண்டாரத்தார் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் பள்ளியில் பயின்ற போது வரலாற்றசிரியார் து. அ. கோபிநாதராயர் எழுதிய  “சோழவம்ச சரித்திரச் சுருக்கம்” என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பினை பெற்றார். அந்நூலை படித்த பொழுதே சோழர் வரலாற்றை மேலும் விரிவாக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது. பின்னத்தூர் நாயராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கணமும், இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார்.

சதாசிவ பண்டாரத்தார் பணி புரிந்த விவரங்கள்

கும்பகோணம் வட்ட அலுவலகத்திலும், உயர்நிலைப் பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் வாணதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1942-ல் அண்ணாமலை செட்டியாரின் அழைப்பை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

சதாசிவ பண்டாரத்தாருக்கு கல்வெட்டில் இருந்த ஆர்வம்

சதாசிவ பண்டாரத்தார் பின்னத்தூர் நாராயணசாமியின் தாக்கத்தால், கல்வெட்டியல் குறித்த ஆர்வம் பிறந்தது. ஊரைச் சுற்றிலும் இருந்த பண்டைய கோயில்களில் காணப்பட்ட கல்வெட்டுகள் இவரது ஆர்வத்தை மேலும் தூண்டின. ஆகையால் வரலாற்றின் மீது அவருக்கு மேலும்  பிறந்தது.

சதாசிவ பண்டாரத்தார் எழுதிய நூல்கள்

1930 இல் “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. அந்நூல் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. பிறகு பாண்டியர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, திருப்புறம்பயம் தல வரலாறு, செம்பியன் மாதேவி தலவரலாறு, காவிரிப்பூம்பட்டினம், திருக்கோவலூர் புராணம், தொல்காப்பியப் பாயிரவுரை போன்ற நூல்களை இவர் படைத்துள்ளார். இவர் தம் ஆசிரியர் வலம்புரி பாலசுப்பிரமணிய பிள்ளையுடன் சேர்ந்து எழுதிய “சைவ சமய சிகாமணிகள் இருவர்” எனும் நூலும் கருணாகரத் தொண்டைமான் பற்றிய நூலும் வெளிவரவில்லை.

பண்டாரத்தார் எழுதிய சில நூல்களின் தொகுப்பு

இவரது படைப்புகளிலேயே “பிற்கால சோழர் சரித்திரம்” மிக முக்கியமான ஒரு நூலாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. இந்த நூல் மூன்று தொகுதிகளாக வெளியானது. தமிழக பல்கலைக்கழகங்களின் இவரது நூல்களே வரலாற்று பாடங்களாக இருந்தன. இவர் இரண்டு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார் தமிழ்நாட்டின் வரலாற்றை ஆராய்ந்து பதிவு செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் சதாசிவ பண்டாரத்தார் என்று கூறினால் அது மிகையாகாது.

சோழர்களின் மைய அரசு வீழ்ச்சிக்குப்பின் தொண்டைமண்டலத்தை ஆண்டவர்கள் பல்லவர்களின் வம்சாவழியான காடவராயர்களும் சம்புவரையர்களும்தான். விரிஞ்சிபுரம், சதுரங்கப்பட்டினம், திருவண்ணாமலை, காஞ்சி எனத்தொடங்கி நெல்லூர், கிருஷ்ணை நதி வரை தங்களது ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். சோழர் ஆட்சியின்போதும் அவர்களின் வீழ்ச்சியின் போதும் கூட கடல் வணிகத்தையும், தொண்டை மண்டலக் கடற்கரைப் பட்டினங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் சம்புவரையர்களே.

சதாசிவ பண்டாரத்தாரின் வரலாற்று ஆய்வுகள்

இவர் தென்னிந்திய வரலாறு குறித்த ஆய்வுகளை கும்பகோணம் வட்டத்தில் உள்ள பல ஊர்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு அதை இதழ்களில் எழுதி வந்துள்ளார். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தனது வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டார். பதினெட்டுக்கும் மேற்பட்ட ஊர்களின் வரலாற்று சிறப்பினை இவரது வரலாற்று ஆய்வின் மூலம் கண்டறிந்து எழுதி, ஆவணப்படுத்த்தியுள்ளார். அப்படி எழுதிய நூல்கள் தான் திருப்புறம்பயம் தல வரலாறு, செம்பியன் மாதேவி தலவரலாறு ஆகியன ஆகும்.

சதாசிவ பண்டாரத்தார் எழுதிய கட்டுரைகள்

சதாசிவ பண்டாரத்தார் எழுதிய  கட்டுரைகள் “செந்தமிழ்” என்ற மாத இதழில் தொடர்ந்து வெளிவந்தது. இவர் எழுதிய முதல் கட்டுரையான “சோழன் கரிகாலன்” இவரது ஆழ்ந்த அறிவையும் வரலாறு குறித்த தெளிவான புரிதலையும் எடுத்துக்கூறியது. பின் இவர் தொல்காப்பியம் குறித்த ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். மேலும் “யதார்த்த வசனி” என்ற இதழின் துணை ஆசிரியராகவும் இருந்து எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார்.

சதாசிவ பண்டாரத்தாரின் சைவ சமய ஈடுபாடு

சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவராக பண்டாரத்தார் திகழ்ந்தார். தாம் பிறந்த ஊரான திருப்புறம்பயத்திலுள்ள கோயிலில் சைவ சமய நால்வருக்கும் ஆண்டு தோறும் குருபூசை நடத்தி வந்துள்ளார்.

சதாசிவ பண்டாரத்தார் கலந்துக்க கொண்ட நிகழ்வுகள்

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் தமிழகப் புலவர் குழு முதன்முதலில் கூடியது. அதன் முதல் கூட்டத்திற்கு சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தலைமை தாங்கினார். அதேபோல தஞ்சாவூரில் இராசராசன் விழாவை முதன் முதலாக ஆரம்பித்தபொழுது அதில் முதல் சொற்பொழிவை சதாசிவ பண்டாரத்தார் நிகழ்த்தினார். 1939-ம் ஆண்டு பிரவரி 27 அன்று, கும்பகோணம் தேப்பெருமாள் நல்லூரில் நடைபெற்ற வன்னியகுல சத்திரிய மாநாட்டில் எல்லா சமூகங்களுக்கும் உரிமை வேண்டும் என முழங்கினார். இந்த உரை மூலம் சமூகநீதிக்கான தேவைக்கு உரக்க குரல் கொடுத்தார்.

சதாசிவ பண்டாரத்தாரின் மற்ற சிறப்புகள்

கற்பனையாகவோ அல்லது வழிவழியாக வழங்கப்பட்டுவந்த கதைகளின் அடிப்படையில் இல்லாமல் வரலாறு மற்றும் கல்வெட்டு சாசனங்களின் தல வரலாற்றுக்கான புதிய பாணியை வகுத்ததே அவரின் பெரும் சிறப்பு என்று கூறலாம். அவர் தானாகவே முன்னின்று பல ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். இவர் எழுதிய ‘சோழர் சரித்திரம்’ அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர்களுக்குப் பாடநூலாகவும் வைக்கப்பட்டுருந்தது. 

இவர் “பிற்காலச் சோழர் சரித்திரம்” எனும் நூலை அடிப்படியாக கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களது வரலாற்று நாவல்களை படைத்தனர். இதில் மிகவும் புகழ்பெற்ற வரலாற்று புதினமான “பொன்னியின் செல்வன்” இவரது இந்த புத்தகத்தை ஆதாரமாகவே வைத்து புனையப்பட்ட கற்பனை கதை என்பதை கல்கி தனது முகவுரையில் குறிப்பிடுகிறார்.  “தாமும் தமிழ்கூறும் நல்லுலகமும் பெரிதும் கடமைபட்டிருப்பதாக” கல்கி ரா. கிருஷ்ணமுர்த்தி நன்றியுடன் தமது “சோழர் கால சரித்திர ஆதாரங்கள்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகள் தமிழில் வெளிவந்துள்ள வரலாற்று ஆய்வு நூல்களில் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்பட்டு, அவைகளை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. இவருடைய ஆய்வுத் திறமையைக் கண்ட மதுரை திருவள்ளுவர் கழகம் 1956-ஆம் ஆண்டு ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கி சிறப்பித்தது.

தனது வாழ்நாள் முழுவதும் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்த சதாசிவ பண்டாரத்தார் அவர்கள், தனது 68-வது வயதில், 1960-ம் ஆண்டு ஜனவரி 2ஆம் நாளன்று காலமானார்.

CATEGORIES
Share This