சென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்

சென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்

சென்னையின் வரலாற்றை தாமல் வெங்கடப்ப நாயகர், 1639ல் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான பிரான்சிஸ் டே-வுக்கு (Francis Day) வணிகதளம் அமைக்க ஒப்பந்தம் எழுதிக்கொடுத்த நாளில் இருந்து கணக்கிடுகிறார்கள். ஆங்கிலேயர் வணிகதளம் அமைக்க இடம் தேடிய காலகட்டத்தில் பழவேற்காட்டுக்கு தெற்கே இருந்த கடற்கரைப் பட்டினங்களை ஆட்சி செய்து வந்தவர்கள் வன்னியர்களான தாமல் சகோதரர்கள் எனும் வேங்கடப்ப நாயகரும் அவர் தம்பியும், பூந்தமல்லி பகுதியின் ஆட்சியாளரான, ஐயப்பன் நாயகரும்தான். சென்னையின் வரலாற்றை பதினேழாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதை விட, தொண்டை மண்டலத்தின் நீண்ட நெடிய வரலாற்று பின்புலத்தில் இருந்து பார்க்கலாம்.

தொண்டை மண்டலத்தின் வரலாறு

கரிகால் சோழன் காஞ்சியைக் கைப்பற்றி அரசமைத்தது முதல் இந்த தொண்டைமண்டலப்பகுதி தமிழகத்தின் மணிமகுடமாக இருந்து, இன்றும் தமிழினத்தின் தலைநகராக தமிழர்களின் ஆளுமையின் சாட்சியாக வரலாற்றில் இருக்கிறது.

சோழநாடு சோறுடைத்து என்பது போல உயர்ந்த அறிவு, பண்பாடு, கலைகளின் முன்னோடியான தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்பது வழக்கம்.

மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தொண்டை மண்டலம் நேரடி பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைமையிடமாக இருந்தது. பல்லவப் பேரரசை வீழ்த்திய ஆதித்தசோழன் “தொண்டை நாடு பாவின” சோழன் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். பல்லவ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பல்லவ அரசின் அரியணையின் வீழ்ச்சியே தவிர அந்நிலப்பகுதி மக்களின், அவர்கள் பண்பாட்டின் வீரமரபின் வீழ்ச்சி அல்ல. காலகாலமாக தென் சீனத்துடன் கடல்வழி வணிக, பண்பாட்டு உறவும், கிழக்காசிய நாடுகளில் குடியேறி இருந்த பல்லவ கிளைவழி அரசுகளுடன் உறவும் நட்பும் கொண்டிருந்தவர்கள் தொண்டை மண்டல பல்லவர்கள் ஆவார்கள். இந்தப் புகழ்மிக்க பல்லவ வம்சாவழியினரான பல்லவராயர்களும், தொண்டைமான்களும், காடவராயர்களும், சம்புவராயர்களும்தான் பிற்கால சோழப்பேரரசின் முதுகெலும்பாக இருந்து கங்கை முதல் கடாரம் வரை பல போர்களை நடத்தியும், சோழ தேசத்திற்காக கிழக்குக் கடல்வணிகத்தையும் காத்தவர்கள். தொண்டைமண்டலப் பல்லவர்கள் தோளோடு தோள் நின்று அரணாகப் பாதுகாத்த சோழ மன்னர்களில் பெரும்பாலானவர்கள் இந்தத் தொண்டைமண்டலத்தில்தான் அமரத்துவம் அடைந்திருக்கிறார்கள். தொண்டைமானாற்றூர் துஞ்சிய ஆதித்தசோழன், தக்கோலப் போரில் யானை மேல் துஞ்சிய ராஜாதித்தசோழன், மேல்பாடியில் ஆற்றூர் துஞ்சிய அரிஞ்சயசோழன், காஞ்சிப் பொன்மாளிகையில் துஞ்சிய இரண்டாம் பராந்தகசோழன், பிரம்ம தேசத்தில் துஞ்சிய ராஜேந்திரசோழன் என தொண்டை மண்டல மண் தன் மடியில், பள்ளிப்படைகளில் சோழப்பேரரசர்களின் ஆன்மாவைக் கொண்டுள்ளது.

உயர்ந்த அறிவு, பண்பாடு, கலைகளின் முன்னோடியான தொண்டை நாடு

சோழர்களின் மைய அரசு வீழ்ச்சிக்குப்பின் தொண்டைமண்டலத்தை ஆண்டவர்கள் பல்லவர்களின் வம்சாவழியான காடவராயர்களும் சம்புவரையர்களும்தான். விரிஞ்சிபுரம், சதுரங்கப்பட்டினம், திருவண்ணாமலை, காஞ்சி எனத்தொடங்கி நெல்லூர், கிருஷ்ணை நதி வரை தங்களது ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். சோழர் ஆட்சியின்போதும் அவர்களின் வீழ்ச்சியின் போதும் கூட கடல் வணிகத்தையும், தொண்டை மண்டலக் கடற்கரைப் பட்டினங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் சம்புவரையர்களே.

விஜயநகர படையெடுப்புக்குப் பிறகு

1367-ல் நடந்த விஜயநகரப் படையெடுப்பில் சம்புவரையர்களின் தலைநகரமான விரிஞ்சிபுரமும், படைவீட்டு நகரமும் அழிக்கப்பட்டாலும், துறைமுகப்பட்டினப் பகுதிகளில் சம்புவரையர்களை தங்கள் ஆளுகைக்குக் கீழ் வைத்தனர். விஜயநகர அரசின் தளபதிகளில் ஒருவனான ‘கண்டரகூளி மாராயன்’ என்பவனின் பெண்ணேஸ்வர மடக்கல்வெட்டு மாதரசன்பட்டினம், நீலகங்கரையான்பட்டினம் (நீலாங்கரை), ராயபுரபட்டினம் (ராயபுரம்), புதுபட்டினம், சதுரவாசன்பட்டினம் (சதுரங்கப்பட்டினம்), கச்சிராயபட்டினம்”எனும் பட்டினங்களை தன் தலைவனுக்கு காட்டிக் கொடுத்ததாகச் சொல்கிறது. விஜயநகர படையெடுப்புக்குப் பின்னர் ராஜநாராயணப்பட்டினம் என்றிருந்த சம்புவராயர்களின் துறைமுகமானது, சதுவான்பட்டினமாகப் பெயர் மாற்றம் பெற்றது. விலையுயர்ந்த பருத்தித்துணிகள், அவுரி சாயமிட்ட காலிகோ துணிகள் மற்றும் எண்ணெய் வகைகளை உலகெங்கும் ஏற்றுமதி செய்த முக்கிய துறைமுகமாக இருந்தது வரலாறு.

ராஜநாராயணப்பட்டினம் என்றிருந்த சம்புவராயர்களின் துறைமுகம் சதுவான்பட்டினமாகப் பெயர் மாற்றம் பெற்றது

விஜயநகர மைய அரசுக்குக் கட்டுப்பட்ட பாளையக்காரர்கள் மூலம் தமிழகத்தில் நிர்வாகம் நடந்த காலத்தில் விஜயநகர அரசில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின. மதுரை, தஞ்சை, செஞ்சியை மையங்களாகக் கொண்டு தமிழகத்தில் நாயக்க அரசின் பிரிவுகள் இருந்தாலும் தொண்டைமண்டலம் இந்த பாளையங்களுக்கு எதற்கும் கட்டுப்படாமல் துறைமுக வணிகம் சம்புவராயர்கள் மற்றும் அவர்களின் வம்சாவழியினரின் ஆளுகையில் இருந்தது.

பெண்ணேஸ்வர மடக் கல்வெட்டு

ஆங்கிலேயர்களின் வருகை

1600 களின் ஆரம்பகாலத்தில் போர்த்துகீசியர்கள் மலபாரில் வன்முறை மூலம் வியாபாரத்தை தொடங்கினர். கிழக்கு கடல் வணிகத்தில் சதுரங்கப்பட்டினம், பழவேற்காடு டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. துர்க்கராசப்பட்டினம் எனும் இடம் அருகே ஆறுமுகம் எனும் இடத்தில் ஆங்கிலேய வணிகதளம் இருத்தது. லஞ்சம் மற்றும் முறையற்ற வணிகம் செய்த டச்சுக்காரர்கள் ஒரு பக்கம், உள்ளூர் ஆட்சியாளர்கள் கொடுத்த தொல்லைகள் மறுபக்கம் என பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர்கள் ஆறுமுகம் வணிகதளத்தை விட்டு தெற்கே நகர முடிவு செய்தனர். கூவம் நதி முகத்துவாரத்தில் இருந்த பகுதியில் வணிகதளம் அமைக்க தாமல் வெங்கடப்ப நாயகர் மற்றும் அவர் தம்பி பூந்தமல்லி ஐயப்ப நாயகரிடம் அனுமதியும் பெற்றனர். சுங்கவரியில் பாதியை வெங்கடப்ப நாயகருக்கு தருவதாக ஒப்பந்தமும் எழுதப்பட்டது.

கூவம் நதி முகத்துவாரமான மாதரசன்பட்டினப்பகுதிகளைக் கொடுத்து ஆங்கிலேயர் குடியிருப்பும், கோட்டையும் அமைந்த இடத்தை தங்கள் தந்தையின் பெயரால் சென்னப்பநாயகர்பட்டினம் என அழைக்க கோரிக்கை வைத்தவர்கள் தாமல் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சகோதரர்கள் வெங்கடப்பநாயகர் மற்றும் பூந்தமல்லி ஐயப்பநாயகர் ஆவார்கள்.

சென்ன, சென்னி என்பது தூய தமிழ் சொற்கள் தான். சென்னியம்மன், சென்னப்பன் என தமிழர்கள் வணங்கும் குலதெய்வங்களும் தாய்தெய்வக் கோவில்களும் இன்றும் உண்டு. சென்னி, செம்பியன் என சோழ மன்னர்கள் பெயர்களையும் காணலாம்.

தாமல் கோட்டம் எனச் சோழர் கால கல்வெட்டுகள் முதல் சம்புவராயர்களை வெற்றி கொண்ட விஜயநகர தளபதி சோமப்ப தண்டநாயக்கன் மகன் கண்டரகூளி மாராயனின் கல்வெட்டுகள் வரை காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் கிராமத்தைக் குறிப்பிடுகின்றன. தாமல் பல்லவ-சோழர் காலத்தில் இருந்தே பெரிய வருவாய் கோட்டமாகவும், நிர்வாக கேந்திரமாகவும், படைப்பற்றாகவும் இருந்த ஊர் ஆகும். காஞ்சியின் வடமேற்கு வணிக வழித்தடத்தில் அமைந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊரும் ஆகும். தாமலில் இருந்த வன்னிய தண்ட நாயகர்கள் 15 ஆயிரம் படைவீரர்கள் கொண்ட படையை தாமலில் நிறுத்தி காஞ்சியின் வடமேற்கு எல்லையை காத்தவர்கள் என்பது வரலாறு.

நாயக்கர் – நாயகர் குழப்பமும் வரலாற்றாய்வாளர்கள் பிழையும்

சென்னையைப் பற்றி எழுதிய வரலாற்றாய்வாளர்கள் அனைவருமே “நாயக்கர்” எனும் சொல்லைக்கொண்டு இப்பகுதி காளஹஸ்தி வெலுகோட்டி வெலமா நாயுடுகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி எனவும் காளஹஸ்தி ஜமீன்கள் அளித்த நிலப்பகுதி எனவும் பிழையாக எழுதியுள்ளனர். விஜயநகர ஆட்சிகாலத்தில் கடற்கரைப் பட்டினங்களை நிர்வகித்து வந்தவர்கள் சம்புவராயர்களின் வம்சாவழியினரும் அவர்களின் தண்டநாயகர்களுமான வன்னிய நாயகர்கள் தான்.

கல்வெட்டுத்தரவுகள் மற்றும் சம கால ஆவணங்கள் மூலம் தொண்டைமண்டலம் மட்டுமில்லாமல், ஆந்திரா உட்பட கிழக்குகடற்கரை மாவட்டங்களில் உள்ள வன்னியர்களுக்கு தான் “நாயகர்” பட்டம் உள்ளது என்பதை இப்போதும் காணலாம். சம்புவராயர்கள் விஜயநகர அரசு கட்டுப்பாட்டில் வந்த நேரங்களிலும் “வன்னியநாயன்”, “வன்னியநாயகர்”, என குறிப்பிட்ட கல்வெட்டுகளைப் பரவலாகக் காணலாம். தொண்டைமண்டலத்தில் தொல்லியல் துறையால் 1978-1979-ம் ஆண்டு படி எடுக்கப்பட்ட (ARE 278,279,280) கல்வெட்டுகள் காலம் 1431-1471-ம் வருடங்களில் செய்த கோவில்கொடைகளில் “வன்னிய குமாரரான திம்ம நாயகர்” என்பவரைப் பற்றிக்குறிப்பிடுகிறது.

1904-ம் ஆண்டு காஞ்சிபுரம் உத்திரமேரூர் பக்கம் திருவந்தவாரில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டு (A.R No 616 of 1904) தாமல் வெங்கடப்ப நாயகர் பேரனான சென்னப்பநாயகரின் மகன் வெங்கடப்ப நாயகர் திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு மண்டபம் எடுப்பதற்கு பூமிதானம் கொடுத்ததைக் கீழ்காணும் கல்வெட்டு சொல்கிறது. கல்வெட்டு தானத்தின் ஆண்டு 1625.

திருவந்தவார் கல்வெட்டு

ஆங்கிலேயருக்கு மதராசப்பட்டினம் கொடுப்பதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட கோவில் நில தானத்தில் தெளிவாக வெங்கடப்ப நாயகரின் வம்சாவழி தாத்தா வெங்கடப்ப நாயகரும், அப்பா சென்னப்ப நாயகரும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளனர். வெங்கடப்ப நாயகரின் அப்பா சென்னப்ப நாயகர் செஞ்சிப் போரில் சந்திரகிரி அரசர் இரண்டாம் ரங்கராயருக்கு ஆதரவாகப் போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வந்தவாசிக்கு ஆளுநராக இருந்தவரும் இதே வெங்கடப்ப நாயகர் தான்.1639ல் ஃபிரான்சிஸ் டேக்கு ஒப்பந்தம் அளித்தவர்கள் மேற்கண்ட தாமல் ஊரைச் சேர்ந்த வன்னிய சென்னப்ப நாயகரின் மகன்கள் என்பதே உண்மை.

ஆங்கிலேய மூல ஆவணங்கள் தாமல் சகோதரர்களை நாயக் அல்லது நாயகு (Naigue) எனவும், தாமல் எனும் ஊரைச் சேர்ந்தவர்கள் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதை மறைத்துவிட்டு சம்பந்தமே இல்லாமல் காளஹஸ்தி வெலுகோட்டி குடும்பத்தை இணைத்து வரலாறு திரிக்கப்பட்டு உள்ளது. காளஹஸ்தி வெலுகோட்டி ஜமீன்களின் எல்லையாக துர்க்கராசுப்பட்டினமும், பழவேற்காட்டு துறைமுகமான ஆறுமுகமும் சொல்லப்பட்டிருக்கிறது மற்றும் அவர்களின் குடும்ப கிளை ஆவணங்களில் இந்த குறிப்பிட்ட காலத்தில் சென்னப்ப நாயகரோ அல்லது அவர் மகன்கள் வெங்கடப்ப நாயகரோ அல்லது ஐயப்ப நாயகரோ குறிப்பிடப்படவில்லை.

1638-39 ல் கூட கல்வெட்டுக் குறிப்புகள் தாமல் சென்னப்ப நாயகரின் தந்தை பெயர் வேங்கடப்ப நாயகர் என்றும் குறிக்கப்பட்டு உள்ளது. தாமல் சென்னப்ப நாயகரின் முன்னோர்கள் பற்றிய குறிப்புகள் மஹீபதி, அவர் மகன் வெங்கடபூபாலன் அவர் மகன் வெங்கடப்ப நாயகர், அவர் மகனான சென்ன மகேந்திரா என்ற சென்னப்ப நாயகர், சென்னப்ப நாயக்கரின் மனைவி கிருஷ்ணாம்பா மற்றும் இவர்களின் மகன்கள் வெங்கட்டப்ப நாயகர், ஐயப்ப நாயக்கர், திம்ம நாயகர் எனக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. வெங்கட்டப்ப நாயகர் தந்தையை போலவே எதிரிகளை வென்றவர் என்றும் செஞ்சி நாயக்கர்களோடு போரிட்டவர் எனவும் குறிப்பிடப்படுகிறார். தூசி-மாமண்டூர் பகுதியில் தன் தந்தை பெயரில் சென்னசாகரம் என்ற பெரிய ஏரி அமைத்து அதற்கு பாலாற்றில் இருந்து நீர் வரும் வகையில் வாய்க்கால் அமைத்து கொடுத்தார் . ஏரியில் இருந்து 32 கிராமங்களுக்கு பாசனவசதி செய்துகொடுத்து அதற்கான வரியும் வசூல் செய்ய உத்தரவு இட்டுள்ளார்.

1639ல் ஆங்கிலேயர்களுக்கு சென்னப்ப நாயகர்பட்டினத்தைக் கொடுத்த பின்னர் தாமல் வெங்கடப்ப நாயகரும், ஐயப்ப நாயகரும் ஆங்கிலேயர் தங்கள் வியாபார அலுவலங்களை அமைக்க ஆள் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தனர். பருத்தி மற்றும் காலிகோ துணி மற்ற இடங்களை விட இங்கு 20% குறைவான விலையில் கிடைத்ததாகவும் உள்ளூர் நாயகர்கள் நல்ல ஒத்துழைப்பும், ஆதரவும் தருவதாக ஆங்கிலேய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த மூன்று வருடங்களில், அதாவது 1642ல் சந்திரகிரி அரசில் மாற்றம் எற்பட்டு, நான்காம் ரங்கராயரால் வெங்கடப்ப நாயகர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறார். கோல்கொண்டா நாவாப்களின் அழுத்தம் மற்றும் உள்நாட்டு குழப்பங்களால் நாடு இல்லாத அரசனாக வேலூர் கோட்டையில் தஞ்சமடைந்தார். மாறிவந்த அரசியல் சூழலில் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கும் ஜார்ஜ் கோட்டையை விரிவுபடுத்தி குடியிறுப்புகள் அமைக்கவும் ஆங்கிலேயர் நான்காம் ரங்கராயரை அணுகி புது ஒப்பந்தம் எழுதினர்.

1639ல் தாமல் நாயகர்கள் அளித்த முதல் ஒப்பந்தத்திற்கும், 1645ல் ரங்கராயர் கொடுத்த ஒப்பந்தத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மதராசப்பட்டினம் தவிர கூடுதலாக நரிமேடு எனும் பகுதியையும் ஆங்கிலேயருக்கு ரங்கராயர் கொடுத்தார். வணிகதளம் அமையும் இடத்திற்கு ரங்கராயப்பட்டினம் என தன் பெயரை வைக்கவும் சொன்னார். ரங்கராயருக்கு எதிராக இருந்த வெங்கடப்ப மற்றும் பூந்தமல்லி ஐயப்ப நாயகர்களை ஆங்கிலேயருக்கு கொடுக்கப்பட்ட பகுதிகளில் நுழைந்து வரிவசூலிக்க அதிகாரம் இல்லை எனவும்,எந்த காரணம் கொண்டும் அவர்களை அங்கு அனுமதிக்கக் கூடாது எனவும் ஆங்கிலேய ஒப்பந்த ஆவணம் சொல்கிறது. மேலும் துறைமுகத்தில் வரும் வரிவசூல் முழுமையும் ஆங்கிலேயர்களே எடுத்துக்கொள்ளவும், உள்ளூர் நிர்வாகம் மற்றும் நீதிபரிபாலனத்தையும் கூட ஆங்கிலேயர்களே செய்து கொள்ளவும், பூந்தமல்லி நாயகர்கள் ஏதும் தொல்லைகொடுத்தால் தான் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார். அடுத்த சில மாதங்களில் ரங்கராயர் பலமிழந்து உள்நாட்டுப் போரில் கர்நாடகப்பகுதிக்கு சென்றபின்னர் அவர் ஆதிக்கமும் செல்வாக்கும் இல்லாததால் பூர்வகுடி வன்னிய நாயகர்களின் கொடையான இடம் அவர்கள் முன்னோர் பெயரில் சென்னப்ப நாயகர் பட்டினமாகவே வரலாற்றில் நிலைத்துவிட்டது.

மெட்ராஸ் பெயர் காரணம்

“மெட்ராஸ்” என ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட மாதரசன்பட்டினத்தின் பெயருக்கு காரணம் சொல்ல கட்டப்பட்ட கதைகள் ஏராளம். கிறிஸ்தவர்கள் பாதிரிகள் பெயரில் அமைந்த இடம் எனவும், முஸ்லீம் மதராசாக்கள் அமைந்த இடம் எனவும். சென்னை வழக்கு மொழி வசவு வார்த்தையை ஆங்கிலப் படுத்திய பெயர் எனவும் கூட உண்மைக்குப் புறம்பான வேடிக்கைக் கதைகள் ஏராளம் புனையப்பட்டன.

1973ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே பெண்ணேஸ்வர மடம்பக்கம் பெண்ணையாற்றங்கரை பாறையில் தொல்லியல் ஆர்வலரான பள்ளி ஆசிரியர் துரைசாமி கவுண்டர் ஒரு கல்வெட்டை கண்டறிந்தார். தமிழக தொல்லியல் துறை பதிவு செய்த அந்த கல்வெட்டு எழுதப்பட்ட காலம் 1370. அதில் குறிப்பிட்ட மாதரசன்பட்டினம்தான் ஆங்கிலேயர் ஜார்ஜ்கோட்டை அமைத்த இடம். அதன் பூர்வாங்க பெயரின் ஆங்கிலச் சுருக்கமே மெட்ராஸ்.

மெட்ராஸ் ஏதோ அன்னியப் பெயர் என நினைத்து பெயர் திருத்தம் செய்து சென்னப்ப நாயகர் அவர்களின் பெயர்ச்சுருக்கமாக சென்னை என வைக்கப்பட்டது. மதராசப்பட்டினமானாலும், சென்னப்பநாயகர்பட்டினமானாலும், இரண்டும் வன்னிய சம்புவராயர்களின் ஆதிக்கத்தில் இருந்த துறைமுகப்பட்டினங்கள் தான்.

ஆங்கிலேயர் சென்னை நாயகர்களுக்கு அளித்த போர்க்குடி உபசாரம்

1703 ம் ஆண்டு, அதாவது, ஆங்கிலேயர் கால் பதித்து 63 ஆண்டுகளுக்குப் பின்னர் வெங்கடப்ப நாயகரின் பேரன் வெங்கடாசலபதி நாயகர் ஆங்கிலேயரை சந்தித்தபோது, போர்குடி உபசாரப்படி இரண்டு வீரவாட்களும் தங்கச்சங்கிலியும் கொடுத்து உபசரித்த கடிதத்தின் படம் கீழே தரப்பட்டுள்ளது.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணம் – 1703

1723 ம் ஆண்டு வெங்கடபதி நாயகர் ஆங்கிலேய கவர்னரை திருவெற்றியூரில் சந்தித்த போது தங்கச்சங்கிலி கொடுத்து உபசரித்த கடிதம்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணம் – 1723

1743ம் வருடமும் வெங்கடபதி நாயகருக்கு ஆங்கிலேய கவர்னர் மரியாதைகள் செய்துள்ளார்.

சென்னைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது வெலுகோட்டி நாயுடுகள் அல்ல

19-ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய ஆவணங்களைத் தொகுத்த ஆங்கிலேய அதிகாரிகள் முதல், நம் வரலாற்று ஆய்வாளர்கள் வரை பல இடங்களில் தாமல் வன்னிய நாயகர்களையும், வெலுகோட்டி நாயுடுகளையும் பெயர் குழப்பத்தில் ஒன்று சேர்த்து குழப்பியடித்துத் தொகுத்திருக்கிறார்கள். இன்றைய சென்னைப்பகுதி மட்டுமில்லாமல் தொண்டைமண்டலம் முழுக்க பெருமளவிலான நில உரிமை பெற்றவர்கள் வன்னியர்கள் என்பது கண்கூடாகக் காணலாம். காலகாலமாக கடற்கரைப்பட்டினங்களில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பூர்வகுடி வன்னியர்களே.

பிற்கால வரலாற்றாய்வாளர்கள் எழுதிய வார்த்தை விளையாட்டுகள் மூல ஆவணங்களோடு ஒத்துப்போகவில்லை என்பதை பிற்காலத்தில் வரிசைப்படுத்தப்பட்ட காளஹஸ்தி குடும்ப கிளை வரலாற்றை வைத்துச் சொல்லலாம்.

தாமர (தாமர்ல) வேறு, தாமல் வேறு

தாமர என்ற குடும்ப வகையறா பெயரை கொண்ட வேலமா சாதியை சேர்ந்தவர்களின் முதல் கல்வெட்டு கனிகிரி பகுதியில் கிடைத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டவர் சென்னப்ப நாயனாகாரு என்பவர், அவரின் தந்தை வரதா நாயனகாரு, அவரின் தந்தை தாமரதர்மா. வருடம் 1579-80 அவர் வெங்கடகிரி அரசரால் கனிகிரி-பொலிசேர்ல சீமை பகுதியில் அமர்த்தப்பட்டனர். காளஹஸ்தி ஜமீன் எல்லை பற்றிய குறிப்பு சந்திரகிரி ரங்கராய காலத்து கல்வெட்டு வருடம் 1577 ம் ஆண்டு தத்த வருடம் கூறும் தகவல் வடக்கு பகுதியாக கடற்கரை பகுதியான துர்கராஜுபட்டினம் என்ற ஆறுமுகம் , தெற்கு எல்லையாக சூலூர்பேட்டை அருகில் உள்ள வெங்கலபுரம் வரை குறிக்கப்பட்டு உள்ளது . கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் அடையாளம் காண முடியவில்லை.

ஆங்கிலேயரிடம் மரியாதை பெற்ற வெங்கடப்ப நாயகர் வாரிசுகள் திம்மப்ப நாயகர் போன்ற பெயர்களும் அவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளோடு காளஹஸ்தி குடும்ப கிளை வாரிசுகள் பெயர்களும் அவர்கள் வாழ்ந்த காலமும் பொருந்திப்போவது இல்லை.

வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட தொண்டை மண்டல பூர்வகுடிகளின் கொடைத்தன்மையையும், தியாகத்தையும் பறைசாற்றும் விதமாக, சென்னை எனும் சென்னப்பநாயகர்பட்டினத்தின் பிதாமகன் சென்னப்ப நாயகரைப் போலவே இன்றும் இந்த பெருநகரின் வளர்ச்சிக்கும், நகரகட்டமைப்புகளுக்கும், வன்னியர்கள் விட்டுக்கொடுத்த நிலங்களும், உரிமைகளும் ஏராளம்.

சென்னையின் மண்ணின் மைந்தர்களை போற்றுவோம்

“சென்னை தினம்” (Madras Day) என ஆங்கிலேயர் கால் பதித்த நாளை கொண்டாடும் இந்நாளில் இந்த நகரத்தை உருவாக்கிய இம்மண்ணின் மைந்தர் தொண்டை மண்டலம் ஈன்றெடுத்த தமிழர் சென்னப்பநாயகரையும் போற்றுவோம்.

CATEGORIES
Share This